SuperTopAds

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய்! யாழ்பாணம் உள்ளிட்ட 4 பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய்! யாழ்பாணம் உள்ளிட்ட 4 பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டது..

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடையும் சிறுவர்கள் மத்தியில் புதிய மற்றும் ஆபத்தான அழற்சி நோய் பரவுவது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அதி அழற்சி நோய்க்குறிகளால் இதுவரை 34 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதி அழற்சி நோய்க்குறி ஏற்படுகிற நோயாளிகளின் உடல் முழுவதும் அழற்சி ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்கத் தவறினால் 

நோயாளிக்கு பல்லுறுப்பு செயலிழப்பு மற்றும் அதிர்ச்சி ஏற்படும். தற்போது இவ்வாறான பாதிப்புக்களுடன் 05 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் 

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டாக்டர் நலின் கித்துல்வத்த குறிப்பிட்டுள்ளார்.

அதி அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட 34 சிறுவர்களில் 21 பேர் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டனர். 

06 சிறுவர்கள் காலி -கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் 04 சிறுவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், தியத்தலாவ, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இவ்வாறான பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன எனவும் டாக்டர் நலின் கித்துல்வத்த கூறினார். 

எவ்வகையான கொவிட் தொற்றாலும் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொற்று நோயில் இருந்து குணமடைந்த இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பின்னர் 

அதி அழற்சி நோய்க்குறிகளால் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் இரண்டு வீதமானவர்கள் உயிரிழக்க நேரிடும். 

சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அவர்களைக் குணப்படுத்த முடியும் எனவும் டாக்டர் நலின் கித்துல்வத்த சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக் கசிவு, தோல் சொறி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 

இது குணப்படுத்தக்கூடிய நோய் எனவும் அவர் கூறினார்.இதேவேளை, தொற்று நோய்க்குப் பிந்தைய அதி அழற்சி நோய்க்குறி இப்போது பெரியவர்களிடமும் பதிவாகியுள்ளது. 

40 வயதிற்குட்பட்ட இருவர் பாலபிட்டிய மருத்துவமனையில் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். பெரியவர்களிடம் கொவிட்-19 அறிகுறிகள் மற்றும் கடுமையான வயிற்று வலியுடன் 

அதி அழற்சி நோய்க்குறி உருவாக்கலாம் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டாக்டர் நலின் கித்துல்வத்த தெரிவித்தார்.

இந்த நோய்க்குறி இலங்கையில் பெரியவர்களிடையேயும் பரவுகிறது என நாங்கள் சந்தேகிக்கிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெரியவர்களை ஒப்பிடும்போது, சிறியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்று இதுவரை பொதுவாக நம்பப்பட்டது.

ஆனால் இப்போது தொற்றுக்குப் பிந்தைய ஆபத்தான நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறுவர்கள் எப்போதுமே மந்தமாகவும், சோர்வாகவும், மிகவும் சுகவீனமாகவும் இருந்தால், உணவு உட்கொள்ளும் அளவும், 

சிறுநீர் வெளியேற்றும் அளவும் மிக குறைவாக இருந்தால், மிக அதிகமாக வேர்த்தால், தோல், நாக்கு, கண்கள் சிவந்திருந்தால், தோல் உரிந்தால், 

கடுமையான வயிற்றுவலி இருந்தால் பெற்றோர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிறுவர் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதி அழற்சி நோய்க்குறிக்கான சிகிச்சை கொரோனா தொற்றுக்கான சிகிச்சை போன்றதல்ல. குழந்தைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். 

இரத்த அழுத்தம் குறைந்தால், இதயத்துக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும் என்பதால் அவர்களை தீவிரமாகக் கவனிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.