அதிபர், ஆசிரியர்கள் மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணி!

ஆசிரியர் - Admin
அதிபர், ஆசிரியர்கள் மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணி!

மன்னாரில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி அளவில் ஆரம்பமானது.

இதன் போது 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், ஆசிரியர், மாணவர், பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமாகி மன்னார் பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து மன்னார் நகர சபை வீதியூடாக மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio