வீட்டில் இரத்தக்கறை - நாவற்குழி பூசகருக்கு நடந்தது என்ன?

ஆசிரியர் - Admin
வீட்டில் இரத்தக்கறை - நாவற்குழி பூசகருக்கு நடந்தது என்ன?

நாவற்குழி தான்தோன்றி ஞானவரைவர் ஆலய தர்மகர்த்தாவும், ஆலய பூசகருமான சதாசிவம் நாகராசா (வயது 72) என்பவரை கடந்த மூன்று மாத காலமாக காணவில்லை என அவரது மனைவி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

“எனது கணவர் ஆலய பூசகராவார். அவரது எமது வீட்டுக்கு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு இரவில் பாதுகாப்புக்காக படுக்க செல்பவர். மகளின் கணவர் கடந்த 96ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். அதனால் மகளின் வீட்டில் யாரும் இல்லாததால் , மகளின் வீட்டுக்கு இரவில் பாதுகாப்புக்காக படுக்க செல்வார்.

அவ்வாறே கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இரவு சென்று இருந்தார். மறுநாள் அவர் வீட்டுக்கு வராததால் நான் தேடி சென்றேன். அப்போது மகளின் வீட்டில் தொலைக்காட்சி இயங்கு நிலையில் இருந்தது. அவரை காணவில்லை. அவர் எங்கும் தேடி காணாத நிலையில் பிள்ளைகளுக்கு அறிவித்தேன். அவர்கள் வந்து பார்த்த போது , வீட்டின் சுவர்கள் மற்றும் நிலங்களில் இரத்த கறைகள் இருந்தன. அத்துடன் அங்கிருந்த எமது பேரனின் காற்சட்டையிலும் இரத்தம் துடைத்த அடையாளங்கள் இருந்தன.

வீட்டினை சூழவுள்ள அனைத்து பகுதியிலும் அவரை தேடினோம். எங்கும் காணாத நிலையில் , அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் எங்களிடம் வாக்கு மூலங்களை எடுத்தனர்.

அவர் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என பொலிஸாரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எமக்கு அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகமே உள்ளது. அவர் நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. அதேவேளை வீட்டிலும் எந்த பொருளும் களவு போகவில்லை.

கடந்த மாதம் மன்னாரில் ஒரு சடலம் காணப்படுவதாக கூறி எம்மை அழைத்து சென்றனர். குறித்த சடலம் அடையாளம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. அதனால் எம்மிடம் டி.என்.ஏ பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்ற பின்னர் எம்மை அனுப்பி வைத்தனர்.

தற்போது மூன்று மாதகாலமாகியும் அவர் பற்றிய எந்த தகவல்களும் இல்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி அவரை கண்டறிந்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.


      

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு