வழக்குப் போட்டு தோற்றுப் போனதை மறந்து விட்டாரா விக்னேஸ்வரன்?
வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பது உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்குப் பொருத்தமானதாக அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வட - கிழக்கில் தாங்களும் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் ஆகியோர் மக்களை ஏமாற்றி ஏதோ மாகாண சபை முறைமையில் உண்மையில் அதிகாரங்களிருக்கின்றன. ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு அந்த அதிகாரங்களை அனுபவிப்பதற்கு அரசாங்கம் மறுக்கிறது என்ற பொய்யைச் சொல்லி இன்னும் இன்னும் தமிழ்மக்களை இந்த மாகாணசபை முறைமைக்குள் விரும்பி முடக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில்தான் வடக்கு மாகாணப் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வவுனியா அரசாங்க அதிபராகவிருந்த சமன் பந்துலசேனவின் நியமனத்திற்கு எதிராகவும், வடக்கு மாகாணப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கும் வகையில் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு எதிராகவும், வடக்கு மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டும் செல்லும் முயற்சிக்கு எதிராகவும் வடக்கு- கிழக்கில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளால் வெளியிடப்படும் கண்டனங்கள், ஒப்பாரிகள் அனைத்தையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக வடக்கு மாகாணத்தின் அதிகாரத்தை அரசு பிழையாகப் பாவிக்கின்றது என்ற கோணத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இதற்கு முன்னரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயலாளரொருவரின் நியமனம் சம்பந்தமாக நீதிமன்றங்கள் ஊடாகச் சென்று வாதாட வேண்டியிருந்தது. அதிலும் விக்னேஸ்வரன் தோற்றுப் போனவர். சிலவேளை தற்போது அவர் அதனை மறந்துவிட்டாரோ தெரியவில்லை. திரும்பவும் அவர் வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். அவர் இவ்வாறு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதானால் செய்யட்டும்.
மீண்டும் மீண்டும் இந்த அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி. இந்த ஒற்றையாட்சியில் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் தானிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பம் நல்லதொரு வாய்ப்பாக அமையும். உண்மையில் தமிழ்மக்களுக்கு வடக்கு மாகாண சபையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இதற்கான தீர்ப்பு அமையும்.
தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டியதொரு இடத்தில், அந்தத் தலைவர்களே ஏற்கனவே எங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கு முற்படும் நிலையில் மக்களின் கண்திறப்பதற்கும் இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும். அந்த வகையில் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பது உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாக அமையும் என்றார்.