இலங்கை பணவீக்கமானது எவ்வித மாற்றங்களுமின்றி..
இலங்கை பணவீக்க நிலைமை தொடர்பில் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் கணிப்பீடுகளின்படி, கடந்த மேமாதத்தைப் போன்றே ஜூன் மாதத்திலும் பணவீக்கமானது எவ்வித மாற்றங்களுமின்றி 6.1 சதவீதமாகப் பதிவாகியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மாதாந்த பணவீக்க நிலைமைகள் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் உள்ளடக்கப்பட்டிருக்கும் தரவுகள் வருமாறு:
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப்பணவீக்கமானது கடந்த ஜுன் மாதம் எவ்வித மாற்றமுமின்றி 6.1 சதவீதமாகக் காணப்பட்டது.
இதற்கு ஜூன் மாதத்தில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத்தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது.
அதேவேளை கடந்த மேமாதம் 10.3 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 9.8 சதவீதம் வரையில் குறைவடைந்தது.
அதேபோன்று மேமாதத்தில் 2.5 சதவீதமாக இருந்த உணவல்லாப்பணவீக்கம் கடந்த மாதம் 2.9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆண்டுக்கான சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணும் கடந்த ஜூன் மாதத்தில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றத்தைப் பொறுத்தவரை, அது கடந்த மாதம் 1.45 சதவீதமாகப் பதிவானது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் உள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் முக்கிய காரணமாக அமைந்தன.
மேலும் உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 1.23 சதவீதமாகவும் 0.22 சதவீதமாகவும் பதிவாகின. அதற்கமைய உணவு வகையினுள் அரிசி, காய்கறிகள், தேங்காய் எண்ணெய் மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகளில் குறிப்பாக அதிகரிப்புகள் அவதானிக்கப்பட்டன.
மேலும் பிரதானமாகப் போக்குவரத்துத் துணைத்துறையில் (பெற்றோல் மற்றும் டீசல்) அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக ஜுன் மாதகாலப்பகுதியில் உணவல்லாவகையில் அதிகரிப்பொன்றை அவதானிக்கமுடிந்தது.
அதேவேளை கடந்த மேமாதத்தில் 4.2 சதவீதமாகக் காணப்பட்ட மையப்பணவீக்கமானது, கடந்த ஜுன் மாதத்தில் 4.1 இற்குச் சிறிதளவினால் குறைவடைந்ததுடன் ஆண்டுச்சராசரி மையப்பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.4. சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.