குப்பிழானில் விவசாய களஞ்சியத்துக்கு அடிக்கல் நாட்டிய வடக்கு ஆளுநர்
கொவிட்-19 காலத்தின் விவசாய உற்பத்திகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாய அமைச்சினால் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் குப்பிழான் விவசாய சம்மேளன வளாகத்தில் நடைபெற்றது.
குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ. நவரத்தினராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய நித்தியகுரு வைத்தீஸ்வரக் குருக்கள் வைத்தீஸ்வரக் குருக்கள் கிருஷ்ணானந்தசர்மா அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கான சம்பிராதய கிரியைகளை ஆற்றினார்.
தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பிரதான அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், விவசாய அமைச்சின் செயலாளர் சிவபாலசுந்தரன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி பிரேம்குமார், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் நிஷாந்தன், விவசாயத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ. நவரத்தினராசா மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயக் களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
அறுவடைக்குப் பின்னான இழப்புக்களைக் குறைப்பதற்காகவும், விவசாய உற்பத்திகளுக்கான சரியான விலைகள் கிடைக்கும் வரை சேமித்து வைக்கும் நோக்குடனும் மேற்படி திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை வடக்கு விவசாய மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.