ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்தியில் குறித்த சிறுமியின் கொலைக்கு எதிரான கோசங்களைக் கொண்ட பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பறை மேளம் அடித்து உயிரிழந்த சிறுமிக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் தமிழ் - முஸ்லிம் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறுமியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், ஹிசாலினிக்கு நீதி வேண்டும், வீட்டு வேலையும் தொழில் தான் சட்டம் வேண்டும், நான் வேலைக்காரி இல்லை தொழிலாளி போன்ற கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
ஒரு அமைச்சராக இருந்தவர், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியது சட்ட மீறல் எனவும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இது தொடர்பில் வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் துண்டுப்பிரசுரம் ஒன்றிணையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறுவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
அண்மையில் தலவாக்கலை டயகம 3 ஆம் பிரிவைச் சேர்ந்த சிறுமியின் மரணம் இலங்கைக்கு அதிர்ச்சியை தரும் செய்தியாகும். இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் ஒரு சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருப்பது முதலாவது குற்றமாகும்.
அத்தோடு, அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, பாரிய குற்றச் செயல்களாகும். இச்சிறுமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அச்சிறுமியின் மரணமானது இலங்கைக்கான கடைசிப் படிப்பினையாக அமைய வேண்டும்.
அதுமட்டுமன்றி இதற்கான காரணத்திற்கு உரியவர்களை உடனடியாக குற்றவியல் சட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களுக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதுடன், அச்சிறுமியின் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்கச் செய்தலும் அரசின் பாரிய பொறுப்பாகும்.
இதன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை, மற்றும் பாதுகாப்பு உட்பட, மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளையும் அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
எனவே, வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.