மட்டக்களப்பில் 10 ஆயிரம் ஏக்கரை அபகரித்து இராணுவ முகாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் தரையின் 10 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ முகாமாக மாற்றுவதற்குரிய செயற்திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படுகின்றது தொடர்பாக ஆளும் தரப்பாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் இருவருக்கும் தெரியுமா ? அல்லது இருவருடைய அனுமதியுடன் மேற்கொள்ளப்படுகின்றதா? என ஈ. பி. ஆர். எல். எப் பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள்; கிழக்குமாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடை பண்ணையாளர்களுக்குரிய காணிகள் 4 தசாப்தங்களுக்கு மேலாக கால்நடை பண்ணையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்காணியில் 10 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ முகாமாக மாற்றுவதற்குரிய செயற்திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படுகின்றதா?
இத்திட்டத்தால் கிடத்தட்ட 30 ஆயிரம் கால்நடைகளுடன் 150 மேற்பட்ட கால்நடை பண்ணையாளர்கள பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும். என்பதுடன் இக் காணிகளை காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டாதா என்ற கேள்விக்கு அப்பால் இக் காணிகளை கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்குவதற்கு ஆளுந்தரப்பைச் சேர்ந்த இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொரோனா சம்மந்தப்பட்ட தடுப்பூசி மேற்கொள்ளப்பட்டுவருவதனால் மிகவிரைவாக மாகாணசபை தேர்தலை நடாத்தமுடியும். இந்த மாகாணசபை தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவித்த நிலையில் இந்த மாகாணசபை முறைமை என்பது முழு இலங்கைக்கும் சதகமான நிலை உருவாக்கும் காரணத்தால் மாகாணசபை தேர்தலை மிகவிரைவாக அமுல்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அமுல்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கம் தலையிட்டு இலங்கை அரசு ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேவேளை இலங்கையின் பொருளாதார தேவைக்காக சீனா அரசாங்கத்துக்கு மட்டும் இலங்கையை தாரைவாத்துக் கெடுப்பது என்பது துரோகத்தனமான செயற்பாடு எனவே அரசாங்கம் அயல்நாடுகளிலும் சர்வதேச மேலதேய நாடுகளுடனும் ஒரு சரியான ஒரு இனக்கப்பாட்டுடன் இலங்கையில் தேசியத்துக்கு எந்தவிதமான குந்தகமும் வராமலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்துக்கு எந்தவித குந்தகமும் வராமல் வெளிநாட்டுக் கொள்கைகளை அமுல்படுத்தப்படவேண்டும் என்றார்.