மீண்டும் துாசு தட்டப்படும் வட்டுவாகல் “கோட்டபாய கடற்படைமுகாம்” காணி அபகரிப்பு திட்டம்! மக்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாதது..
முல்லைத்தீவு - வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாமிற்காக தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சியினால் போராட்டம் வெடிக்கும், என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர்பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கோத்தாபாய கடற்படை முகாமிற்காக
அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரித்தால், மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆற்பாட்டத்தில் இறங்குவோம். முள்ளிவாய்க்கால் கிழக்கு,
வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள குறித்த தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றிற்கு அமைவாக,
கடற்படையினருக்கு அபகரிப்புச் செய்வதற்கு ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும்,
மக்கள் பிரதிநிகளும் எதிர்ப்பு ஆற்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அதனடிப்படையில் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. அதேவேளை அவ்வாறு ஆற்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன், அது தொடர்பான வழக்குவிசாரணைகள் மூன்று வருடங்களைக் கடந்து
தற்போதும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட
கடிதம் ஒன்றின் மூலம் மீண்டும் காணிகளை அளவீடுசெய்து கடற்படைக்கு அபகரிக்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு முயற்சிதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளிலுள்ள 271.6249ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணிகள்,காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில்
அரசாங்கம் எடுத்துக்கொள்ள இருப்பதாக வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்து. குறிப்பாக கடந்த 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதியன்று வௌியான 2030/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம்,
அப்போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த கஜந்த கருணாதிலக இவ்வறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள,
குறித்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடுசெய்து, அவற்றை கடற்படையினருக்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகள் பலமுறை இடம்பெற்றிருந்தன.
இவ்வாறாக கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி அன்றும், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த அளவீட்டு முயற்சிக்கு எதிராக குறித்த காணிகளுக்குரிய தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து ஆற்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். நமது ஆற்பாட்டத்தின் பலனாக அந்த அளவீட்டு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.
அதேவேளை இவ்வாறு ஆற்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக நான் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வட்டுவாகல் கிராமஅபிவிருத்திச்சங்கத் தலைவர் அன்னலிங்கம் சண்முகலிங்கம்,
இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செளியன் உள்ளிட்ட நால்வரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுமிருந்தோம். மூன்று வருடங்களைக்கடந்தும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
இது தொடர்பிலான வழக்குவிசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன்,
08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அக் கடிதத்திலே குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர்
மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம்
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி
காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டுப்பம்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும், குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் எனில் அந்தக் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது காணிகளை அளவீடுசெய்து கடற்படைக்கு வழங்குவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அங்கு தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கடற்படைத் தளம் அங்கிருந்து அகற்றப்படவேண்டும். இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள கோத்தாபாய கடற்படை முகாமினால்,
தமிழ் மக்கள் பலரும் குடியிருக்கவே காணிகளின்றி அவதிப்படுகின்றனர். அத்தோடு தமிழ் மக்கள் பலருக்கு அங்கு வாழ்வாதார பயிற்செய்கை நிலங்கள் காணப்படுகின்றன.
இதனால் பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்து வாடுகின்றனர். இதனைவிட இந்த கோத்தாபாய கடற்படை முகாம், அங்குள்ள மீனவமக்கள் பாரம்பரியமாக பயன்படுத்திவந்த அரசிச்சல் எனப்படுகின்ற ஒரு பிரதான வீதியையும் ஆக்கிரமித்துள்ளது.
இவ்வாறு அரிச்சல்பாதை மூடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்துள்ள படகு இறங்குதுறை, கரவலைப்பாடு என்பவற்றினை அங்குள்ள மீனவ மக்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கோத்தாபாய கடற்படை முகாம் அப்பகுதியில் அமைந்துள்ளதால், நந்திக்கடலின் வடக்காறுப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிச் செயற்பாட்டில் ஈடுபடமுடியாத நிலையும் ஏற்படுகின்றது.
அங்கு பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபட்ட மக்கள், கடற்படை முகாமிற்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும்போது, கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்திய, தாக்கிய சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
இவ்வாறாக தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்கள், பயிற்செய்கை நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்ற விடயத்தைத் தாண்டி, தமிழ் மக்களின் பாரிய பொருளாதார வளங்களை பல வழிகளிலும்
இந்த கோத்தாபாய கடற்படை முகாம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. எனவேதான் இந்த கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
மேலும் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சிகளை உரியவர்கள் கைவிடவேண்டும். அங்கிருந்து அந்த கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும்.
எமது தமிழ் மக்களுக்குரிய காணிகளையும், வாழ்வாதார வளங்களையும் அவர்களுக்கே மீளக் கையளிக்கவேண்டும். இவற்றிற்கு மாறாக காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால், எமது மண்மீட்புப் போராட்டங்களும் தொடரும் என்றார்.