SuperTopAds

திண்மக்கழிவகற்றலுக்கு எமக்கு ஒத்துழைப்பு தாருங்கள்-கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்

ஆசிரியர் - Editor III
திண்மக்கழிவகற்றலுக்கு எமக்கு ஒத்துழைப்பு தாருங்கள்-கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்

கொரோனா தொற்றால் 29 பேர் எமது மாநகர சபையில் பாதிக்கப்பட்டுள்ளனர் 

கொரோனா தொற்றால் 29 பேர்  எமது மாநகர சபையில்  பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில்    குறைந்த ஆளணியுடன் திண்மக்கழிவகற்றலை   முன்னெடுத்துள்ளோம்.எனவே  திண்மக்கழிவகற்றலில் குறைபாடுகள் வந்தால் பொறுத்து கொண்டு எமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம்  தொடர்பாக திங்கட்கிழமை(28) மாலை  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

எமது கல்முனை பிராந்தியம் கடந்த 2 மாதங்களாக  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றது.எனினும் கொரோனா தொற்று எம்மிடையே மிக அதிகமாக பரவி வருகின்றது.இதனால் பல மரணங்கள் சம்பவித்து வருகின்றது.மருத்துவ அதிகாரிகள்  சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தாலும் கொரோனா பரவல் அதிகரித்தே செல்கின்றது.தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது எமது மாநகர சபை மக்களுக்கு அத்தியவசியமான சேவைகளை வழங்கி வருகின்றது.அதில் திண்மக்கழிவு  முகாமைத்துவம்  முக்கியமானது.ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட இச்சேவையானது அத்தியவசிய சேவையாக உள்ளபடியினால் அதை செய்ய வேண்டியது மாநகர சபையின் கடமையாக உள்ளது.

இச்சேவையை நாம் மிகவும் கிரமமாக செய்து வருகின்றோம்.இதனை தேர்ச்சி பெற்ற நிர்வாகத்தின் கீழ் 6 வலயங்களாக பிரித்து இதனை மேற்கொண்டுள்ளோம்.கல்முனையின் சனத்தொகையை பொறுத்தமட்டில் 1 இலட்சத்து ஐம்பதாயிரம்  பேர் இருக்கின்றார்கள்.சூழிலை நோக்கி இவர்களின் திண்மக்கழிவுகள்  வெளியிடப்படுகின்றது.இதனூடாக 120 தொன் திண்மக்கழிவு எடுக்கப்படுகின்றது.

இதனை அனைத்தையும் கிரமமாக சேகரித்து துப்பரவு செய்து  பள்ளக்காட்டிற்கு எடுத்து செல்கின்றோம்.தற்போது 150 ஊழியர்கள்  இருக்க வேண்டும்.ஆனால் நிரந்தர ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் என குறைந்த ஊழியர்களே உள்ளனர்.இதில் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேலைக்கு சமூகம் தர முடியாமல் உள்ளனர்.ஏனைய ஊழியர்களை கொண்டே எமது திண்மக்கழிவு அகற்றலை செய்து கொண்டிருக்கின்றோம்.

இருந்த போதிலும் எமது கழிவகற்றலை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றோம்.திண்மக்கழிவகற்றலானது வீடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை.அரச அலுவலகங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம்.இதன்போது எந்தவித கட்டணமும் அறவிடப்படாமல் தான் அனைத்து சேவைகளும் இடம்பெறுகின்றது.  கல்முனை மாநகர சபை மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் குறைந்த ஆளணியுடன் இச்சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.எனவே  திண்மக்கழிவகற்றலில் குறைபாடுகள் வந்தால் பொறுத்து கொண்டு எமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வூடக சந்திப்பில் மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. கே.எம். அர்சத் காரியப்பரும் கலந்து கொண்டார்.