சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழை விழுங்கியது சீனமொழி!
சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்கள புதிய கட்டடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் நூலகப் பிரிவு குறித்த பெயர்ப் பலகையில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகளில் காணப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெயர்ப் பலகையில் இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உள்ளக ஈ நூலகமொன்றுக்கு சீன அரசாங்கம் நிதி உதவி வழங்கியதாகவும் அதற்கு நன்றி பாராட்டும் வகையில் பெயர்ப் பலகையில் சீன மொழி உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
ஏற்கனவே கொழும்பு துறைமுக நகரின் ஓர் பகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை நாடாளுமன்றிலும் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நூலக பெயர்ப் பலகை மீண்டும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.