அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணனிகளை களவாடிய ஐவருக்கு விளக்கமறியல்
பாடசாலை ஒன்றின் அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணனிகளை களவாடிய 5 ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021 -04-05 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை அதிபர் காரியாலயத்தினை உடைத்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூபா 150,000 பெறுமதியான தலா 6 எச்.பி வர்க்க மடிகணனிகள் களவாடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 2021-04-01 ஆம் திகதி இறுதியாக பாடசாலை நடைபெற்று அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது.பின்னர் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையின் பின்னர் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் பாடசாலையை திறக்க முற்பட்டுள்ளதுடன் அதிபர் அறை உடைக்கப்ட்டு புத்தம் புதிய 6 மடிக்கணனிகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
இதற்கமைய பொலிஸாரிடம் அதிபர் முறைப்பாடு செய்ததற்கமைய பொலிஸ் குழுவினர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 20 ,23, 25 ,30 ,வயதினை சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 6 மடிக்கணனிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
குறித்த முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் ,பொலிஸ் சார்ஜன்ட் ஆரியசேன, குமாரசிங்க , பொலிஸ் கன்டபிள்களான துரைசிங்கம், ஜகத் , குழுவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இன்று (11) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் ஐவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.