சங்கானையில் குருக்கள் கொலை_ தீர்ப்பின் சாராம்சம் வருமாறு

ஆசிரியர் - Admin
சங்கானையில் குருக்கள் கொலை_ தீர்ப்பின் சாராம்சம் வருமாறு

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றம்துக்கு இராணுவக் கொப்ரல் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று இன்று தீர்ப்பளித்தது.

முன்னர் வெளியாகிய செய்திக்குக்கு இங்கே கிளிக்

2010 ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி,  பாலசுப்பிரமணிம் சிவரூபன் (விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்து விலகி இராணுவத்தில் சரணடைந்ததாக மன்றிடம் தெரவித்தனர்) ஆகியோரும் இராணுவக் கொப்ரல் பேதுறு குணசேனவும் எதிரிகளாகக் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:

குருக்களின் மகன் சாட்சியம்
“2010ஆம் ஆண்டு டிசெம்பர் 11ஆம் திகதி இரவு 8 தொடக்கம் 8.15 மணியளவில் வீட்டுக்கு முன்பாகவுள்ள முடக்கில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் என்னை மறித்து “கத்தாதே, கத்தினால் சுடுவம்” என்றார். அதனால் நான் அப்பா அப்பா என்று கத்தினேன். அப்போது வீட்டுக்குள்ளிருந்து அப்பா ஓடி வந்தார். அவரை இவர்கள் சுட்டார். அப்பா குப்பிற விழுந்துவிட்டார். அவரை காப்பாத்துறத்துக்காக நான் சென்ற போது எனது பக்கம் சுட்டார்கள். நான் எனது வீட்டுக்குப் பக்கமாக உள்ள ஒழுங்கையால் ஓடிவிட்டேன்” என்று முதலாவது சாட்சியான ஆசிரியர் நித்தியானந்தக் குருக்கள் ஜெயானந்த சர்மா சாட்சியமளித்துள்ளார்.
“அந்த ஒழுங்கையால் ஓடிச் சென்று அண்ணாவின் வீட்டு மதில் பாய்ந்து அவரின் வீட்டுக்குள் சென்றேன். அங்கு அண்ணா அப்பாவைப் பார்க்கப் போய்விட்டார். நான் வீட்டுத் தண்ணித் தொட்டியில் ஏறி நின்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை நோக்கிப் பார்த்தேன். அங்கு சூடு நடத்திய இருவரில் (இரண்டாவது மற்றும் மூன்றாவது எதிரிகள்) முகத்தில் கட்டியிருந்த துணியைக் கழற்றிவிட்டு அப்பாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டனர். அதன்போது அவர்களின் முகத்தை நன்றாக அவதானித்தேன். அதனடிப்படையிலேயே அவர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அடையாளம் காட்டியிருந்தேன்” என்றும் நித்தியானந்தக் குருக்கள் ஜெயானந்த சர்மா சாட்சியமளித்துள்ளார்.

இராணுவச் சிப்பாய் சாட்சியம்

மூன்றாவது எதிரி அளவெட்டி இராணுவக் காவலரனில் கொப்ரல் தர அதிகாரியான அந்தக் காவலரணுக்குப் பொறுப்பாகவிருந்தாானேர். அந்த முகாமில் எதிரியின் கீழ் கடமையாற்றிய அஜந்த விமலசூர்ய என்ற சிப்பாய் இந்த மன்றில் சாட்சியமளித்தார்.
“சம்பவ தினத்தன்று எனது பொறுப்பதிகாரியான மூன்றாவது எதிரியும் முதலாவது எதிரியும் அளவெட்டி இராணுவக் காவலரணுக்கு முன்பாக மாலை 6 மணியளவில் உரையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின் கொப்ரல், முதலாம் எதிரியுடன் இராணுவக் காவலனிலிருந்து மது அருந்திவிட்டு, மலசடகூடத்துக்குச் சென்றார். அப்போது அவர், தனது ரி56 துப்பாக்கியை வெளியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். மலசல கூடத்திலிருந்து வெளியே வந்து காவலரண் வேலிப் பக்கமாகச் செல்வதை அவதானித்தேன்” என்று அன்றைய தினம் காவலரணின் காவல் கடமையிலிருந்த சிப்பாய் அஜந்த விமலசூர்ய சாட்சியமளித்தார்.

இராணுவ மேஜர் சாட்சியம்

சுன்னாகம் சந்தியிலிருந்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாகவிருந்த மேஜர் பங்கல பிரபா ராமநாயக்க இந்த மன்றில் சாட்சியமளித்திருந்தார்.
“சம்பவ தினத்தன்று இருள் சூழ்ந்த வேளையில் சங்கானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இந்து மத குருக்கள் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அது தொடர்பில் இராணுவத்தினரிடம் உடனடியாகவே விசாரணைகளை ஆரம்பித்தேன். சுன்னாகம் இராணுவத் தலைமையகத்துக்குட்பட்ட காவலரண்களைச் சோதனையிட்டு வரும் போது அளவெட்டி இராணுவக் காவலரணிலும் சோதனை செய்தேன்.
அங்கு கொப்ரல் பேதுறு குணசேனவின் கீழ் 8 படைச்சிப்பாய்கள் கடமையாற்றினர். அனைவரது துப்பாக்கிகளும் சோதனையிடப்பட்டன. அப்போது கொப்ரலின் துப்பாக்கியிலிருந்து “வெடி வைத்த மணம்” வந்தது. அந்த மணம் துப்பாக்கிச் சூடு நடத்தி குறைந்தது 5 மணித்தியாலங்களுக்கு இருக்கும். அந்தத் துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட 4 மகசின்கள் மற்றும் 116 ரவைகள் தொடர்பில் ஆராய்ந்த போது, 4 ரவைகள் குறைந்திருந்தன.
அதனால் கொப்ரல் குணசேனவை உடனடியாகவே கைது செய்தேன். அவரை சுன்னாகம் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மானிப்பாய்ப் பொலிஸாரை அழைத்து அவரை ஒப்படைத்தேன். அத்துடன், அவரது துப்பாக்கி மற்றும் ரவைகளையும் பொலிஸாரிடம் கையளித்தேன்” என்று மேஜர் பங்கல பிரபா ராமநாயக்க இந்த மன்றில் சாட்சியமளித்தார்.

விஞ்ஞான ஆய்வு

பொலிஸார் சாட்சியம்

“குருக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இடத்தில் விஞ்ஞான ஆய்வு பொலிஸ் பிரிவால் (சோகோ) குற்றப் பிரதேசம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அங்கு ரி56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெற்று ரவை ஒன்று மீட்கப்பட்டது. அதனை பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்தேன்” என்று விஞ்ஞான ஆய்வு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியமளித்தார்.

அரச பகுப்பாய்வு

அதிகாரி சாட்சியம்

 
அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரி இந்த மன்றில் சாட்சியமளித்திருந்தார். சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட வெற்று ரவை மூன்றாவது எதிரியின் துப்பாக்கியிலிருந்து சென்றமை ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது எனச் சாட்சியமளித்தார்.

சட்டமருத்துவ அதிகாரி சாட்சியம்

“உயிரிழந்த சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அத்துடன், அவரது மகன் நித்தியானந்தக் குருக்கள் ஜெயானந்த சர்மா துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்” என்று சட்டமருத்துவ அதிகாரி எஸ். சிவரூபன் சாட்சியமளித்தார்.

நீதிபதி மன்றில் சாட்சியம்

“இந்த வழக்கின் எதிரிகள் மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் என் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளை முதலாவது சாட்சி அடையாளம் காட்டியிருந்தார்” என்று அப்போதைய நீதிவானான மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன் இந்த மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.

பொலிஸ் விசாரணை
அதிகாரி சாட்சியம்

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.

மூன்றாவது எதிரியான இராணுவ கொப்ரலை சுன்னாகம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒப்படைத்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

முதலாம் எதிரியின் வீட்டு சுவாமி அறையிலிருந்து குருக்களிடம் கொள்ளையிடப்பட்ட ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டன. இரண்டாம் எதிரியின் மனைவியின் தாயாரிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டன.
கொள்ளையிட்டுச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் எரிபொருள் தீர்ந்ததால் எதிரிகளால் கைவிடப்பட்ட நிலையில் இளவாலைப் பகுதியில் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் கைவிட்டுச் சென்ற லுமாலா துவிச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது. இரண்டாம் எதிரியின் வீட்டிலிருந்து பெண்கள் ரக லுமாலா துவிச்சக்கர வண்டியொன்று மீட்கப்பட்டது ” என்று பொலிஸ் அதிகாரி சாட்சியமளித்தார்.

எதிரிகள் மூவரும் சாட்சியம்

முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் தாம் இருவரும் முன்னாள் போராளிகள் எனவும் மறுவாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் எனவும் இந்தச் சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை என சாட்சிக் கூண்டில் நின்று சத்தியம் செய்து சாட்சியமளித்தனர்.

மூன்றாம் எதிரி சாட்சியம்

சம்பவ தினத்தன்று எனது பிறந்த நாள். அதற்கு பன்றி சுட்டுக்கொன்று வருவதாக முதலாம் எதிரியும் இரண்டாம் எதிரியும் எனது துப்பாக்கியை வாங்கிச் சென்றனர். அப்போது மாலை 6.30 மணியிருக்கும்.

அன்றைய தினம் நான் எங்குமே செல்லவில்லை. பின்னர் 8.30 மணியளவில் துப்பாக்கியை இருவரும் கொண்டுவந்து மீளத் தந்தனர். அதில் 4 ரவைகள் குறைந்திருந்தன” என்று மூன்றாம் எதிரி சாட்சியமளித்தார்.

மூன்றாம் எதிரியின் சாட்சியதை மன்று முக்கியமான சாட்சியாக ஏற்றுக்கொள்கிறது. அவர் குறுக்கு விசாலணைக்குட்படுத்தப்பட்டதால், அவரால் ஏனைய எதிரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க முடியும்.

அதனடிப்படையில் அரச தரப்புச் சாட்சியங்களுடன் ஒப்புறுதி செய்யும் வகையில் மூன்றாம் எதிரியின் சாட்சியம் அமைந்துள்ளது.

மூன்று பேர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவரகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளை தான் கண்டதாகவும் அதனடிப்படையில் அவர்களை அடையாளம் காண்பித்ததாகவும் முதலாவது சாட்சியான ஜெயானந்த சர்மா சாட்சியமளித்துள்ளார்.

சந்தர்ப்ப சூழல் சாட்சியங்கள் மற்றும் ஒப்புறுதிச் சாட்சிகளின் அடிப்படையில் பொது நோக்கத்துடன் மூன்று எதிரிகளும் செயற்பட்டுள்ளனர் என்பது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்
3 எதிரிகளையும் மன்று குற்றவாளிகள் என அறிவிக்கிறது.

இராணுவ மேஜருக்கு நீதிமன்று பாராட்டு இந்த வழக்கு விசாரணை முடிவுறுவதற்கு இராணுவ மேஜர் மேஜர் பங்கல பிரபா ராமநாயக்கவின் விரைந்த செயற்பாடே காரணமாக அமைந்தது. அவர் சம்பவம் தொடர்பில் அறிந்ததும் தனக்கு கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த இராணுவ காவலரண்களில் பணியாற்றிய அத்தனை இராணுவத்தினரையும் விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை அன்றைய தினமே கண்டறிந்தார். அதனால்தான் இந்தச் சம்பவத்தின் குற்றவாளிகளைக் கைது செய்ய முடிந்தது. அவரது துரித நடவடிகையையும் அனுபவம் வாய்ந்த சேவையையும் இந்த மன்று பாராட்டுகின்றது. அத்துடன் பொலிஸ் அதிகாரியும் தனது கடமையை சரிவரச் செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள்.

தண்டனைத் தீர்ப்பு

இந்துமத குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமைக்கு மூன்று எதிரிகளுக்கும் 2 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

தானியங்கி சுடுகலனை (ரி56 துப்பாக்கி) குற்றச்செயலுக்கு பயன்படுத்தியமைக்கு இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் தூக்குத் தண்டை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியும் அதனடிப்படையில் எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படுகிறது. தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

குருக்களை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் குருக்களின் குடும்பத்துக்கு எதிரிகள் மூவரும் தலா ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். தவறின் ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்தக் குற்றத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் தலா 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

குருக்களின மகனைப் படுகாயப்படுத்தியமைக்கு எதிரிகள் காயப்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் அவருக்கு எதிரிகள் மூவரும் தலா ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். தவறின் ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்தக் குற்றத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் தலா 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இந்துமத குருக்களை கொலை செய்த குற்றத்துக்கு மூன்று எதிரிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

“இலங்கை ஜனநாயகச் சொசலிசக் குடியரசின் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் தினத்தில் – இடத்தில் எதிர்கள் மூவரின் உடலிருந்து உயிர் பிரியும்வரை தூக்கிலிடப்படுவார்” என்று தீ்ர்ப்பளித்து நீதிபதி தனது பேனாவை உடைத் தெறிந்தார். அத்துடன் மன்று கலைந்தது.