15 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..! தப்பி ஓடிய டிப்பர் வாகன காரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பம்..
பசறை பேருந்து விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 45 வயதான சந்தேக நபர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய அவரது இரத்தம் மற்றும் சிறிநீர் மாதிரிகள் இன்று நீதித்துறை மருத்துவ அதிகாரிகளினால் பெறப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்படும். இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த 15 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
விபத்தில் காயமடைந்த நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவுசெய்யப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். பசறை 13 ஆம் கட்டை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று 200 அடி பள்ளத்தில் விழுந்து இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு,
33 பேர் படுகாயமடைந்துள்ளனர். பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொணராகலை - பதுளை பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை காலை 7.15 மணியளவில் , லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பஸ் பயணித்த திசைக்கு எதிர் திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்துக்கு செல்ல இடமளிக்க முற்பட்டபோது , பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளது.