உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் குறைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டோம்! - மாவை

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் குறைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டோம்! - மாவை

உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் ஏன் குறைந்தது என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து காரணங்களையும் அறிந்துள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் பாதிப்புக்கள் உள்ள போதிலும், இத் தேர்தலில் வடகிழக்கில் கூட்டமைப்பு 40 இடங்களில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் இன்னொரு முறை இந்த பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமென நான் கருதுகிறேன். இத் தேர்தல் பாடம் சகலருக்கும் படிப்பினையாக அமைந்திருக்கிறது.

இந்த தேர்தல் முறைமையினால் பல இடங்களில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால்; தற்போது சபைகளை ஆட்சியமைப்பதில் நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் சபைகளை நல்லிணக்கத்துடன் நடாத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

எமது தேசம் போரால் அழிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை மீளக் கட்டியெழுப்பவதற்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. ஆகவே அதற்கான திட்டங்களைத் தீட்டி செயற்படுத்த வேண்டும். அதற்கமைய வரவு செலவுத் திட்டங்களை தயாரித்து செயற்பட வேண்டியது அவசியம். அதற்கு சகலரையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும்.

இதேவேளை நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய இடங்களின் சில உள்ளுராட்சி சபைகளில் தலைமைத்துவத்தைக் கோருவதற்கு எங்களுக்கு உறுப்பினர்கள் போதாமல் இருக்கின்றது. இதனால் அந்த இடங்களில் என்ன செய்வதென்பது குறித்து தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக இத் தேர்தலில் எமக்கான வாக்குவீதம் ஏன் குறைந்தது என்பது தொடர்பில் நாம் ஆராயந்து காரணங்களையும் அறிந்துள்ளோம். இதற்காக யாரையும் குறை சொல்லி பழி சுமத்தி எதிர்காலத்தைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே இவற்றை நிவர்த்தி செய்து கொண்டு அதற்கான அடித்தளத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொண்டு எமது மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் பயணிப்பதுக்கு தீர்மானித்திருக்கின்றோம்” என்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு