தண்டிக்கப்படாதவரை தாக்குதல்கள் தொடரும்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழர்கள் மீது நடந்தேறிய படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அரசும், குற்றவாளிகளும் தண்டிக்கப்படாதவரை, இலங்கைத்தீவில் சிங்களவர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள் மீதான வன்முறைகள் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடருக்காக ஜெனீவா சென்றுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னராக மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் தொடர்ச்சியே தற்போதைய மைத்திரி ரணில் கூட்டாட்சியிலும் இடம்பெறுகின்றன. இது ஆட்சிகளைக்கடந்து சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டுகின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற காலங்களில், இவ்வாறு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற சம்பவங்கள், நிலைமைகளை திசை திருப்புகின்ற அரசின் செயல் என்பதற்கு அப்பால் இது அரசுக்கு அனைத்துலக அரங்கில் அழுத்தங்களை கொடுத்திருப்பதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இவற்றையெல்லாம் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, ஐ.நா மனித உரிமை சபையின் ஆணையாளர் அலுவலகத்தோடு சந்திப்புக்களை நடாத்தியிருந்தோம்.
அச்சந்திப்புக்களின் போது, தமிழர் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து அதனை இலங்கை அரசாங்கம் அழித்தது. அதன்போதும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பொறுப்புடன் நடக்கவில்லை. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நியாயம் வழங்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த காலத்தில் சிங்கள அரசிற்கு சார்பாகவோ அல்லது நடுநிலையாகவோ இருந்த முஸ்லிம் மக்கள் இன்று இலங்கை அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இருந்ததால் அவர்களை அழித்த இலங்கை அரசு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இல்லாத முஸ்லிம் மக்களின் பலமாக திகழ்கின்ற அவர்களது பொருளாதாரத்தை தற்போது சிதைத்து வருகின்றது.
இதன் வெளிப்பாடே அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள். இலங்கை அரசாங்கம் தன்னைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை. தான் எதுவும் செய்யலாம் என்ற தோரணையிலேயே செயற்பட்டு வருகின்றது. இது பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததால் ஏற்பட்டவிளைவே.
எனவே தான் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பில் உரையாற்றும்போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோருகின்றோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.