பளை தர்மகேணிப் பகுதியில் இராணுவ பிக்கப் மோதி இளம் குடும்பத்தலைவர் பரிதாபச் சாவு

இராணுவ பிக் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பளை, தர்மக்கேணி சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.
பளை, இத்தாவிலைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் ( வயது 29) என்பவரே உயிரிழந்தார். தர்மகுலசிங்கம் தர்மகுமார் (வயது 27) என்பவரே படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவர் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.