விடுதலை புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி உறவுகள் போராட்டம்..! இன்று முதல் ஆரம்பம்..
தமிழீழ விடுதலை புலிகளுக்கு உதவிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது உறவினர்களை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
இதேவேளை கடமையில் ஈடுபட்டிருந்த புாக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். ஆயினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலயைில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர்.
அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிசார் போராட்டகாரர்களை வீதியிலிருந்து கரைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் பொலிசாருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த போராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.