யாழ்.வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்..! நிர்வாக ஒழுங்கை குலைக்கும் அரசியல்..
யாழ்.வேலணை பிரதேச செயலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த இடமாற்றத்தை கடுமையாக எதிர்த்துவரும் மக்கள் புதிய பிரதேச செயலரை பதவியேற்கவிடாது இன்று காலை போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டகாரர்களை கலைந்து செல்லும்படி கூறியதுடன், தவறினால் கைது செய்வோம். என எச்சரித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது. அத்துடன் வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன்,
வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.இந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் பிரதேச மக்கள் பிரதசே செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அறிந்த பொலிஸார், இன்று முற்பகல் 10 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தனர். அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
அத்துடன் புதிய பிரதேச செயலாளரை கடமையேற்கவைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தின் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்று அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மின்சார இணைப்பு உள்ள வீடுகளுக்கும் மின்சார இணைப்பு இல்லை. என உறுதிப்படுத்துமாறு கேட்டதற்கு மறுப்பு தொிவித்ததே பிரதேச செயலரின் அதிரடி இடமாற்றத்தின் பின்னணி என்னும் கூறப்படுகிறது.