கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம்..! 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிப்பு, வீடுகள் சேதம்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் இரணைமடு வான் கதவு திறக்கப்பட்டமையால் ஏற்பட்டிருந்த வெள்ளம் ஆகியவற்றினால் மாவட்டத்தில் 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 04.00 மணிவரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 51 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
7 தற்காலிக வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களை சேர்ந்த 253 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவில் 190 குடும்பங்களை சேர்ந்த 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய
புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது.