வீட்டில் உயிரிழந்த 60 வயதான முதியவர்..! போலி ஆவணங்களை பயன்படுத்தி மிக இரகசியமாக சடலத்தை அடக்கம் செய்த உறவினர்கள், தீவிர விசாரணைகள் ஆரம்பம்..
சுகயீனமடைந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த 60 வயதான நபரின் உடலை போலியான மரண விசாரணை சான்றிதழை காண்பித்து அடக்கம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் வெல்லம்பிட்டிய - குமாரசிறி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், கிரான்ஸ்பாஸ் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் உடல் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.
வெல்லம்பிட்டி பொலிஸார் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தற்போது அந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக,
உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவுகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெல்லம்பிட்டி, குமாரசிறி பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். நோய் வாய்ப்பட்டிருந்துள்ள அவர், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையம் அருகே உள்ள வைத்தியர் ஒருவரிடமே வழமையாக சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ள நிலையில்,
குறித்த மரணத்தின் பின்னர் அவரை அடக்கம் செய்ய அவ் வைத்தியர் அனுமதித்துள்ளார். இந் நிலையிலேயே தெமட்டகொடை பகுதியில் உள்ள அரச அதிகாரி ஒருவரிடம் இருந்து போலியாக அறிக்கை ஒன்றைப் பெற்று,
குறித்த நபரின் சடலம் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவில் அடக்கஸ்தலம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இந் நிலையில் போலி ஆவண தயாரிப்பு தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள பொலிசார்,
இறந்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்தும் அவதானம் செலுத்தி விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.