SuperTopAds

அடுத்துவரும் இரு வாரங்கள் மிக முக்கியமானவை..! நாட்டின் எந்த பகுதிக்கும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படலாம், மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் அடுத்துவரும் இரு வாரங்கள் மிக தீர்க்கமானவை என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொவிட் -19 தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா, அதனை மக்கள் உணர்ந்து செயற்படவேண்டியது கட்டாயம் எனவும் கூறியுள்ளார். 

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவையேற்படின் ஏனைய பகுதிகளையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயாராகவே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, 

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸாருக்கு இதுதொடர்பாக அறிவித்துள்ளோம்.

கொரோனா தொடர்பாக உன்னிப்பாக அவதானித்தே, நாம் சில பகுதிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் சில பகுதிகளையும் தனிமைப்படுத்த வேண்டிய தேவையேற்பட்டால், அதனையும் நிச்சயமாக நாம் மேற்கொள்வோம்.

இந்த விடயத்தில் பொது மக்கள்தான் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.முடிந்தளவு தேவையற்ற பயணங்களை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது மிகவும் தீர்க்கமானவை என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.