SuperTopAds

நாடு இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறதா..? ஜனாதிபதி தலமையிலான கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானம் குறித்து இராணுவ தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I

நாட்டில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு எதிர்வரும் 9ம் திகதி அதிகாலை 5 மணி தொடக்கம் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

எனினும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்து செயற்படுவது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட்-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தின்பேதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

இந்த செயலணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,கொவிட் 19 தொற்று சுகாதாரம், பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் முழு உலகிலும் பல விதங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபரை 

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாங்கள் அடையாளம் கண்ட நாளிலிருந்து, மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இருப்பினும், இத்தொற்று கிருமிக்கு நிரந்தர சிகிச்சையை கண்டுபிடிக்காத நிலையில், 

நாம் இனி நாட்டை முற்றாக மூடிவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்க முடியாது. குழந்தைகளின் கல்வியில் பாடசாலைகள் மூடியதன் விளைவு பல ஆண்டுகளுக்கு தாக்கம் செலுத்தக்கூடும். மேலும், அன்றாடம் தொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் மீது 

கொவிட் 19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் வேறுபாடுகளையும் களைந்து நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட வேண்டும்.

சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், கொவிட் -19 ஐ தோற்கடிக்க முடியும் என்றார்.