கொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..! பலர் தனிமைப்படுத்தப்படும் அபாயம்..
பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் தப்பித்து ஹாலி - எலை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹாலி-எலைப் பகுதியின் ரொசட் பெருந்தோட்டத்தின் முதலாம் பிரிவிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட பெருந்தோட்டப் பிரிவிற்கு வெளியில் எவரும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட கொரோனா தொற்றாளரின்
குடும்பத்தினர்களடங்கிய ஆறுபேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வழிமுறையிலான பாதுகாப்பு வசதிகளும் இத்தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பேலியகொடை மீன் சந்தையில் கடமையாற்றி வந்த இந்நபர் பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம்
கொரோனா தொற்றாளர் என்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினமே தப்பி ஓடிய குறித்த நபர் அங்கிருந்து புறக்கோட்டை இ.போ.ச. பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து பேருந்தில் தலங்கம டிப்போவைச் சேர்ந்த இ.போ.ச. பஸ்சில் இரவு. 12 மணிக்கு புறப்பட்டு
காலை 6 மணிக்கு பதுளை வழியில் ஹாலி-எலைக்கு வந்துள்ளார். அங்கு மதுபானம் விற்பனை நிலையமொன்றில் மதுபான வகைகளை எடுத்துக்கொண்ட கொரோனா தொற்றாளர் ரொசட் தோட்டத்திற்கு சென்றுள்ளார். கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடி வந்த செய்தி
பதுளை சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருக்கு கிடைக்கவேஅவர்கள் விரைந்து குறிப்பிட்ட நபரைப் பிடித்து பதுளை வைத்தியசாலை விசேட பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், இக் கொரோனா தொற்றாளர் பயணித்த பஸ் பயணிகள் அவர் தொடர்புகளை மேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தீவிர புலன் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட தொற்றாளர் தோட்டத்தின் தனது வீட்டிற்கு வந்தவுடன் தகவல் கிடைக்கப்பெற்றதுமே பொலிசாரும் சுகாதாரப் பிரிவினரும் துரிதமாக செயற்பட்டதினால் கொரோனா தொற்றாளர் தோட்டத்தில் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஏற்படவிருந்த பாரிய எதிர்விளைவுகள் தடுக்கப்பட்டன. இத்தொற்றாளர் ஹாலி-எலை நகரில் சென்ற கடையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.