ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளிலும் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்படுகின்றனர்..! இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது தொற்று..
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். என கேட்டிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா,
வார இறுதி நாட்களில் மேற்கொள்ளும் பயணங்களை கட்டுப்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவும் முடிந்தளவு வார இறுதி நாள் பயணங்களை நிறுத்துவது நல்லதெனவும் அவர் கேட்டிருக்கின்றார்.
இது குறித்து இராணுவ தளபதி மேலும் தொிவித்துள்ளதாவது, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் 110 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சீதுவ பகுதியை சேர்ந்த 48 பேரும், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் 21 பேரும்
அடங்குகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, தற்போது அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் கம்பஹா மாட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 5,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 1956 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,385 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.