SuperTopAds

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலைக்குரியது

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலைக்குரியது

கண்டி திகன பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட 8 அமைப்புக்கள் கூட்டாக இணை ந்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளன. 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம்  வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள் நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. 

வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலை கொள்கிறோம். 

இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள்  இனி மேல் இடம்பெறா என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. 

ஆட்சிக்கு வந்து  அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்க வேண்டும். 

ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும், அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. 

வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் ஆகும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்ச வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். 

அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சூழமைவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இவ் இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்க ளுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இவ்வன்முறைகளுக்கு காரணமான தொடந்தேச்சியான பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோம். என்றுள்ளது.