சித்துப்பாத்தி மயனத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதன் பின்னணியிலா நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது தாக்குதல்..? விசாரணைக்கு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
சித்துப்பாத்தி மயனத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதன் பின்னணியிலா நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது தாக்குதல்..? விசாரணைக்கு கோரிக்கை..

யாழ்.அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது சபை அலுவலகத்திற்குள்ளேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் ஊழியர் அவரை அலுவலகம் தேடி வந்து தாக்கியமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மன்றுரைத்தார்.

நல்லூர் பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சாரதிக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கிலேயே இந்த விடயத்தை பாதிக்கப்பட்ட தரப்பு நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த விடயத்தை முன்வைத்தார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட இந்த மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த மாயனத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே, அவ்வாறு இருக்க இந்த மயானத்தில் அத்துமீறி நுழைந்து , மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான பணிகளை நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் முன்னெடுத்துள்ளார். இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர சபையின் சாரதி, இன்று நல்லூர் பிரதேச சபைக்கு அழைக்காமல் வருகை தந்து 

செயலாளரின் அலுவலகத்துக்குள் அத்துமீறி அவர் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தியுள்ளார். எனவே இந்த விடயத்தில் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவேண்டும் என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு