SuperTopAds

இலங்கையை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்தக் கோரி வட மாகாணசபையில் தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
இலங்கையை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்தக் கோரி வட மாகாணசபையில் தீர்மானம்!

இலங்கை அரசை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரும் தீர்மாகம் வடக்கு மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 117 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் மேலும் , “2015 செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் முதலியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் இலக்கம் 30:1 இனுடைய இணை அனுசரணையாகவும் அதில் ஒப்பமிட்டதுமாக இலங்கை இருந்ததையும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் மீறுதல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற சட்ட நெறி பொறியமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாடு நிலைக்குள் அது தன்னை உட்படுத்திக் கொண்டதையும் நினைவு கூர்ந்து,

30:1 இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க தவறி விட்டிருப்பதோடு அரசினுடைய சனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்க முதுநிலை உறுப்பினர்கள் தாங்கள் இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி இருப்பதையும் அழுத்தமாக தெரிவிப்பதோடு,

ஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான எந்த ஒரு மனப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்தும் தவறியிருப்பது மட்டுமல்லாமல் சிங்கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப்போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக்களை பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துவதையும் அக்கறையுடன் கவனத்தில் கொண்டு இலங்கையின் வட மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் எடுக்கிறது.

1. இலங்கையானது தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மான 30:1 இனை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல், இருப்பதையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதிய வருடாந்த அறிக்கை இல: A/HRC/3/23 இன் முடிவுரை V: 52 கூறுவதான இலங்கையின் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் முதலியவற்றின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்புமுனை வகிபாகத்தை மேற்கொள்ளும்படி மனித உரிமை ஆணையகத்தை உயர்ஸ்தானிகர் தூண்டுகிறார். அத்தோடு பொறுப்புக் கூறுதலின் வளர்ச்சிக்கு துணை நிற்கக் கூடியவையான உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகித்தல் உள்ளிட்ட வேறு வழிகளை ஆராயும்படி உறுப்பு நாடுகளை அழைக்கிறது என்பதையும் கருத்திலெடுத்துள்ள இந்த சபையானது இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் தலைமையிலான ஒரு சர்வதேச சட்ட நெறிப் பொறியமைப்புக்கு முற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறது.

2. உண்மை, நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல், இலங்கையிலே நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமானதில்லை என்று இந்தச் சபை நம்புகின்றது.

3. 2015 செப்ரெம்பரிலான இலங்கை மீதான OHCHR இன் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல், றோம் நியதிச் சட்டத்தை அங்கீகரிக்க இலங்கையை வற்புறுத்தும்படி ஐநாவையும் சர்வதேச சமூகத்தையும் இந்தச் சபை கோருகிறது.

4. தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும், அவர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்த சபையானது, ஒரு அரசியல் தீர்வுக்கான இணக்க நடுவராக செயற்படும்படி சர்வதேச சமூகத்தைக் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறது.