இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே....
இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே....
இன, மத பேதமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இளைஞர்கள் கைக்கோர்க்கின்றனர்....
"வாழ்க்கைக்கு திறமை – திறமைக்கு வேலைவாய்ப்பு" கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்...
நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீரவை பெற்றுக் கொடுத்தோம்....
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
"இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுவரெலியா அல்பைன் ஹோட்டலில் இன்று (2020.07.26) நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர், தற்போது இன, மத பேதமின்றி இளைஞர் யுவதிகள் ஒரு கட்சியில் இணைந்திருப்பார்களாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே என்று குறிப்பிட்டார்.
நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்து இளைஞர்களை சந்தித்து கலந்துரையாட கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டின் இளைஞர்கள் குறித்து பேசும்போது பிரேமதாச யுகத்தை மறக்க முடியாது.
1988 மற்றும் 1990 ஆகிய காலப்பகுதிகளில் பிரேமதாச அரசாங்கத்தின் பயங்கரவாதத்தில் நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர். அதில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 1416 ஆகும். வீதி நெடுகிலும் இளைஞர் யுவதிகள் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருந்தனர்.
நீங்கள் இக்காலப்பகுதியில் பிறந்தும் இருந்திருக்க மாட்டீர்கள். அவ்வாறான யுகமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம். ஒருநாள் நான் தங்காலையிலிருந்து மாத்தறை நீதிமன்றத்திற்கு செல்லும் வரை இறந்தவர்களின் உடல்களின் எண்ணிக்கையை எண்ணினேன்.
மாத்தறைக்கு செல்லும்போது இறந்தவர்களின் 28 உடல்கள் காணப்பட்டன. அவ்வாறானதொரு வரலாற்றை கடந்தே நாம் நாட்டின் அபிவிருத்தியை தொடங்கினோம். அதுவரை இருந்த எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கவில்லை.
30 ஆண்டுகள் நீடித்த யுத்த காலத்தில் உங்களது பெற்றோரின் பைகளை பேருந்துகளில் சோதனை செய்வார்கள். அதிக சன நெரிசல் மிகுந்த பேருந்துகளில் செல்லும் வழியில் சோதனை செய்வார்கள். அவ்வாறான யுகமொன்றையே நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் தொடர்ந்தும் நீடித்திருந்தால் இன்றும் நாளையும் அதே செயற்பாடே நீடித்திருக்கும். அவ்வாறான நிலையை எம்மால் இல்லாதொழிக்க முடிந்தது.
ஆட்சிக்கு வந்து நாங்கள் என்ன செய்தோம் என்று சிலர் கேட்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை தொடங்கினாலும், தேர்தல் ஆணையாளர் அதனை நிறுத்தினார். அது மாத்திரமன்றி, ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இப்போது நியமனம் வழங்குவது மாத்திரமே எஞ்சியுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையாளர் அதையும் தேர்தல் முடியும்வரை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வேலைவாய்ப்புகளும் கூட இலஞ்சமாக கருதப்பட வாய்ப்புள்ளது என அதற்கு காரணம் கூறுகிறார். நாம் வேலைவாய்ப்பு வழங்கியது அதற்கல்ல. அது எமது கொள்கை. நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தினோம். அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கினோம். ஆனால், 2015ஆம் ஆண்டின் பின்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாது சென்றது. அந்த வாய்ப்பை நாம் மீண்டும் பெற்றுக் கொடுப்போம். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். தொழில்நுட்ப கல்லூரிகளை மேம்படுத்தியது இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைக்கு திறமையும் திறமைக்கு
வேலைவாய்ப்பையும் பெற்று கொள்ளும் ஆற்றல் உள்ளமையாலேயே. இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்த அரசாங்கமொன்று இருக்குமாயின் அது எமது அரசாங்கமே. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறே அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கினார். அதற்கமையவே பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மற்றும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
மொட்டு சின்னத்தை சேர்ந்த எமக்கு மத பேதம் இல்லை. இன பேதம் இல்லை. இன்று மத பேதம், இன பேதம், குல பேதம் இன்றி ஒன்றாக இணைந்துள்ள கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது. உங்களது வாழ்க்கை தாமரை மொட்டிற்கு வழங்கவும். அதுபோன்றே மூன்று விருப்பு வாக்குகளையும் பாவிப்பது உங்கள் உரிமையாகும்.
குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.