வீரவன்சவுக்கு வக்காலத்து வாங்கிய முரளிதரன் - மனோவிடம் வாங்கிக் கட்டுகிறார்!

ஆசிரியர் - Admin
வீரவன்சவுக்கு வக்காலத்து வாங்கிய முரளிதரன் - மனோவிடம் வாங்கிக் கட்டுகிறார்!

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க ஒப்பந்த அடிப்படையில் முத்தையா முரளிதரன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட வேட்பாளர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், தன்னுடைய சக கிரிக்கெட் வீரர்களுக்காக வாய் திறக்காத முரளி தற்போது விமலுக்காக வாய் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள மனோ கணேசன், “கொழும்பில் தமிழர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாமென, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இவருக்கு புத்தி மட்டு என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும் என்பதால், இவருக்கு நான் பதில் கூற விரும்பவில்லை” எனவும் கூறியுள்ளார்.

“முரளிதரனுடன் கிரிக்கெட் அணியில் ஒன்றாய் விளையாடிய சக வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தபோது, முழு நாடுமே அவர்களுக்காக குரல் கொடுத்தது. ஆனால் அப்போது வாயைத் திறக்காத முரளி, இப்போது தன் பிழைப்புக்காக அரசியல்வாதி விமல் வீரவன்சவுக்கு வாய் திறந்துள்ளார். இதிலிருந்தே இவர் யார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமும், என்னிடமும் தமிழ் சமூகங்களை ஒப்படைக்க முடியாது எனக் கூறும் விமல் வீரவன்சவிடம், தமிழர்களுக்கான என்ன மாற்றுத் தீர்வுத்திட்டம் இருக்கிறது என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பிறகு அவருக்காக இவர் வாக்கு கோரலாம். தமிழ், முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் என்று சொன்னவர் இந்த விமல் வீரவன்ச. கொழும்பு மாவட்டத்தில் இவர்களது கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழ், முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இதுதான் உண்மை. இந்நிலையில் இவர் எதற்காக இன்று தமிழ் வாக்குகளை கோருகிறார்?

சஜித் பிரேமதாசவை விட, கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற இவர் துடியாய் துடிப்பது எனக்கு தெரியும். இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் தமிழர்களின் மீது திடீர் பாசம் விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய இவர் முயல்கிறார். இதற்குத்தான் முரளிதரன் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார் எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. இதையும் முரளிதரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Radio