நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. - உதயகுமார் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும்இ தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
அட்டன் எபோட்சிலி தோட்டத்தில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
" வெறுமனே கைகளை வீசிக்கொண்டு அல்லாமல் மலையகத்துக்கு ஆக்கப்பூர்வமான சேவைகளை செய்துவிட்டே மக்கள் முன்னணிலையில் வாக்குகேட்டு வந்துள்ளோம்.
2015 முதல் 2019 வரையான காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலமாகும். 40 ஆண்டுகளுக்கு மேல் செய்யப்படாதிருந்த பல விடயங்களைக்கூட நான்கரை வருடங்களில் செய்து செயல்வீரர்கள் என்பதனை தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி அல்ல. அது மலையக மக்களுக்கான கூட்டணி. உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கமாகும். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைக்கூட தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத நிலையிலேயே ஆளுங்கட்சி பக்கமுள்ள இன்றைய மலையக அரசியல்வாதிகள் இருக்கின்றனர் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று நாம் அமைச்சுப்பதவிகளை பெற்ற பின்னர் அபிவிருத்திகள் தொடரும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
நான்கவரை வருடங்களில் எம்மால் பல சேவைகளை செய்யமுடிந்தால் இன்னும் ஐந்தாண்டுகள் கிடைத்தால் எவ்வளவு சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும். எனவே. வாய்ச்சொல் வீரர்களுக்கு அல்லாமல் செயல்வீரர்களுக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.
நுவரெலியா மாவட்டத்துக்குதான் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்தத்தேர்தலிலும் சில சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் சென்றுவிடுவார்கள். .எனவே, முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கிடைத்த வாக்குரிமையை வீணடிக்கவேண்டும். உரிய வகையில் பயன்படுத்துங்கள்." - என்றார்.