மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்)
மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டன் எபோட்சிலி தோட்டத்தில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்மவர்கள் யானைக்கே வாக்களித்தார்கள். இம்முறை யானை சின்னம் இல்லை. அது காட்டுக்குபோய்விட்டது. எனவே, தொலைபேசிக்கு வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச பிரதமரானால்தான் நாங்கள் அமைச்சராக முடியும். எனவே, முதலில் தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
திகாம்பரம், உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் மலையக மக்களுக்கு கூடுதல் சேவைகளை செய்துள்ளோம். கண்டியில் இருந்து வாக்கு கேட்டுவந்துள்ளனர். மேலும் சிலரும் வருகின்றனர். இவர்களுக்கு வாக்களிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணிதான் இலங்கையிலுள்ள இரண்டாது பெரிய தமிழ்க்கட்சியாகும். 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்வசம் இருந்தனர். மூன்று அமைச்சுகள்கூட வழங்கப்பட்டிருந்தன. அவற்றின்மூலம் நாம் சேவைசெய்து காட்டினோம்.