கிராமிய வைத்தியசாலைகள் மேம்படுத்தப்படவேண்டும்.

ஆசிரியர் - Editor I
கிராமிய வைத்தியசாலைகள் மேம்படுத்தப்படவேண்டும்.

இலங்கையின் வடபகுதியில் பல்வேறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்ற போதும் அவற்றின் சேவைகள் பூரணத்துவம் உடையன என்று கூற முடியாதுள்ளது. என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் கிராம பகுதிகளிலுள்ள மருத்துவமனை களின் அபிவிருத்தி அத்தியாவசியமானதும் முன்னுரிமை அடிப்படையில் மேற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகவும் அமைந்துள்ளது எனவும், வடக்கில் வைத் தியர்கள் பற்றாக்குறை கவலை எனவும் கூறியிருக்கின்றார். 

வவுனியா- புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக் கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது, 

சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைக்கப்படுகின்றது.

இலங்கையின் வடபகுதியில் பல்வேறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்ற போதும் அவற்றின் சேவைகள் பூரணத்துவம் உடையன என்று கூற முடியாதுள்ளது. 

இந் நிலையில் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்தி அத்தியாவசியமானதும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகவும் அமைந்துள்ளன.

இந் நிலையில் சுகாதார சேவைகள் அமைச்சினால் இனங்காணப்பட்ட புளியங்குளம் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு சிறப்புற செயற்படுவதற்கு உதவும் வகையில் புதிய வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

வெறுமனே கட்டடங்களை மட்டும் உருவாக்குவதன் மூலம் மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கிவிட முடியாது. மாறாக இம் மருத்துவ மனைகளில் சேவையாற்றுவதற்கு கூடுதலான மருத்துவர்கள்,தாதியர் போன்றோர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். வருடா வருடம் பல நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் உருவாக்கி வருகின்ற போதும் இவ்வாறான மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். 

பல்கலைக்கழகங்களிலிருந்து வருடா வருடம் வெளியேறுகின்ற மருத்துவர்களில்; கூடுதலானவர்கள் மேலதிகப் படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளை நோக்கி சென்று விடுகின்றார்கள். திரும்பி வருபவர்கள் மிகச் சிலரே. இதனால் பின் தங்கிய பகுதிகளிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒரு நிரந்தர வைத்தியர் கூட இல்லாத நிலையில் வருகைதரும் வைத்திய நிபுணர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் அவை இயங்கி வருவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.

இதே நேரத்தில் எத்தனையோ வைத்திய நிபுணர்கள் அவர்களின் திறமை அடிப்படையில் மேலை நாடுகளுக்கு சேவை புரிவதற்காக அழைக்கப்பட்ட போதும் அவர்கள் அந்த அழைப்புக்களை நிராகரித்து தமது மண்ணில் இங்குள்ள உறவுகளுக்கு மருத்துவ சேவைகளை இரவு பகல் கண் துஞ்சாது ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் அளப்பரும் சேவைகளை இத் தருணத்தில் நன்றியறிதலுடன் பாராட்டுகின்றேன்.

அதே போன்று மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வருகின்ற அல்லது மருத்துவமனைகளில் தங்கியிருந்து மருத்துவ வசதிகளைப் பெற்று வருகின்ற நோயாளர்கள் இந்த மருத்துவமனைகளின் சேவைகள் தங்களுடன் முற்றுப் பெறுவதில்லை என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் நோயாளர்களுக்கும் மருத்துவ சேவைகளை முறையாக வழங்கக் கூடிய வகையில் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்த முன்வர வேண்டும். 

இக் கட்டடங்களையும் அதனோடு இணைந்த குளியலறை, கழிப்பறை போன்ற பகுதிகளையும் மிக நேர்த்தியாக பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். எம்மிடையே நிலவுகின்ற தவறானதொரு பொதுக்கருத்தினால் அரச சொத்துக்களை பயன்படுத்துவதில் ஒரு மெத்தனப்போக்கு அல்லது அசண்டையீனம் காணப்படுவதை பல இடங்களில் அவதானிக்க முடிகின்றது. இதை வெள்ளைக்காரன் காலத்தின் தாக்கம் அல்லது பாதிப்பு என்று கூறலாம். 

கட்டடங்கள், மக்கள் சேவைகள் ஆகியன வெள்ளைக்காரனுக்கு உரியது தானே என்ற ஒரு அலட்சியப் போக்கு அப்போதிருந்தது. அதனால் நமக்கென்ன என்ற ஒரு மனோநிலையும் இருந்தது. அதைத் தற்போதும் தொடர்வது பிழையென்று கூறவருகின்றேன். 

ஒரு அறையில் இருந்து வேலை முடிந்து வெளியேறும் போது அந்த அறையின் மின்விளக்கு, மின்விசிறி,குளிரூட்டிகள் ஆகியவற்றை நிறுத்தாது அப்படியே விட்டுச்செல்லல், அரச வாகனங்களை சீரான பராமரிப்பின்றி இரவு பகல் என தொடர்ந்து பாவித்து அவற்றைப் பழுதடையச் செய்தல், 


அரசகட்டடங்களை அழுக்காக்குதல், கழிப்பறைகளை முறையாக நீரூற்றி சுத்தம் செய்யாது விடுதல் போன்ற தவறான பழக்கங்கள் எம்மிடம் உண்டு. அதே நேரம் எமது சொந்த வீட்டில் இவை அனைத்தும் மிகவும் கவனமாக நேர்த்தியாக பயன்படுத்தப்படுவன. தற்காலத்தில் அரச சொத்துக்களும் எம்மிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணங்களிலிருந்து கட்டப்பட்டவையே என்ற எண்ணம் எமது மனதில் எழ வேண்டும். அப்போது தான் அவற்றின் மீது எமது கவனமுந் திரும்பும். இப்பொழுது போரின் பின்னர் பலவும் சும்மா கிடைக்கின்றன.

இவ்வாறு தொடர்ந்து கிடைக்க மாட்டாஎன்பதை நாங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு எமக்கு நன்கொடைகள், நிதியங்கள், பணங்கள் வராதுதடைப்பட்டவுடன் தான் நாங்கள் விழித்துக் கொள்வோம். அப்பொழுது எமது வானங்களைப் பழுது பார்க்கப் பணம் இருக்காது. கட்டடங்களைப் புனரமைக்க பணம் இருக்காது. ஆகவே இப்பொழுதிருந்தே அரச ஆதனங்களை, பொருட்களைச் சீரியவாறு பயன்படுத்தவும் பராமரிக்கவும் பழகிக் கொள்ளுங்கள். 


அத்துடன் வருமுன் காப்போம் என்ற கூற்றுக்கு அமைவாக தொற்றுநோய்கள் ஏற்பட்டு அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் எம்மைப்பாதுகாத்துக்கொள்வதே மிகச்சிறந்ததாகும். அண்மைக்காலமாக தொற்றுநொய்களை விட தொற்றா நோய்களின் தாக்கங்களே எமது மக்களை வாட்டி வதைக்கின்ற நோய்களாக இனம்காணப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் வாயிலாக அறியமுடிகின்றது. தொற்றா நோய்த்தாக்கங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது எமது தவறான உணவுப்பழக்கவழக்கங்களேயாகும். 

உலக மருத்துவ சபையின் ஒரு பிரபல வைத்தியக்கலாநிதியின் கூற்றின்படி ஆசியாவில் வாழும் ஒட்டுமொத்த மக்களினதும் மரபணுக்களில் சர்க்கரை வியாதி தோன்றுவதற்கான காரணிகள் பற்றிக்கொண்டுள்ளன எனவும் இந்த நோயிலிருந்து எம்மைப்பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது உணவுப்பழக்க வழக்கங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

முறையான உணவுப் பழக்கங்கள் மூலமும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலமுமே இந் நோய்த்தாக்கங்களிலிருந்து எம்மைப்பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவுங் கூறியுள்ளார். தொற்று நோய்களைப் பொறுத்தவரை அவற்றின் தாக்கங்களை அதிகரிக்கச் செய்வதும் அல்லது அடங்கிப்போகச் செய்வதும் எமது கைகளிலேயே இருக்கின்றன. 

நாம் சற்று விழிப்பாக செயற்படுகின்ற போது தொற்று நோய்த்தாக்கங்கள் தூர விலகுகின்றன. அதே போன்று சுற்றுப்புறச் சூழல், குடிநீர் மற்றும் உணவுகளில் அசண்டையீனம் ஏற்படுகின்றபோது தொற்று நோய்களுக்கு அவை வாய்ப்பான காலமாக மாறிவிடுகின்றன. 

எனவே எமது பகுதியில் நோய்களற்ற ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டுமாயின் பொதுமக்களும் மருத்துவ பிரிவும் இணைந்து செயற்படுகின்ற போதே அது சாத்தியமாகும். ஆகவே இன்று இங்கே திறந்து வைக்கப்படுகின்ற மருத்துவ நிலையத்தின் வெளிநோயாளர் பிரிவு திருப்திகரமான ஒரு சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் நோய்களற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க இந்த நிலையம் பாடுபடும் என எதி ர்பார்க்கிறேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு