SuperTopAds

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

“வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொற்காலமாக இருக்கும். கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகிறது.

எனினும் நாடு இராணுவ மயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற- தகுதியான இராணுவ அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது?

இராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின் சேவையை பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார். நாட்டை இராணுவ மயமாக்க வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை.

இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவும் இல்லை, இராணுவத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும் நினைக்கமாட்டார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.