மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்தஅதிபர்களும், ஆசிரியர்களும் ...
(க.கிஷாந்தன்)
மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (29.06.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று (29.06.2020) மீண்டும் திறக்கப்பட்டன.
பாடசாலைகளில் நான்கு கட்டங்களின் கீழ் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள கல்வி அமைச்சு, அதன் முதற்கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களை இன்று பாடசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது. அத்துடன், பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வழிகாட்டல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஊழியர்களால் அவர்களின் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது, மாணவர்கள் வருகைதந்த பின்னர் அவர்களிடையே சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பது எப்படி, யாருக்காவது திடீரென சுகயீனம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் அதிபர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்பறையை எவ்வாறு நடத்துவது, நேர அட்டவணை உட்பட இதர கல்விசார் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.