SuperTopAds

போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது - ராமேஷ்வரன் தெரிவிப்பு

ஆசிரியர் - Admin
போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது - ராமேஷ்வரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

" இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

" இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் இணைவோம் எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்குகேட்கின்றனர். மேலும் சிலர் இரண்டு வாக்குகளை எங்களுக்கு தாருங்கள் என கெஞ்சுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுடன் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியைவிட்டு வெளியேறியவர்களை தற்போது இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை.

பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்றோம். ஐவரையும் மக்கள் வெற்றிபெறவைப்பதுடன், போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்தபதிலை வழங்குவார்கள். எனவே, மக்கள் மத்தியில் அவர்களின் போலிப்பிரச்சாரம் எடுபடாது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தோம். ஐக்கிய தேசியக்கட்சியே அதனை தடுத்து நிறுத்தியது. இந்த அரசாங்கத்தின்கீழ் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாளை கையொப்பமிட்டால்கூட ஆயிரம் ரூபா கிடைத்துவிடும். ஆனால், நாம் அவசரப்படமாட்டோம்.

ஏனெனில் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்தையும், இறப்பரையும் கோருகின்றனர். அந்த கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. மக்களுக்கு எவ்வித சுமையும் அதிகரிக்காத வகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காகவே நிதானமாக செயற்பட்டுவருகின்றோம். கூடியவிரைவில் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

காங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்." - என்றார்.