ஆயிரம் ரூபா கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்)
தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயிரம் ரூபா தொடர்பில் கதைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. 5 வருடங்களாக ஆயிரம் ரூபா தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் 26.06.2020 அன்று அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது ஆயிரம் ரூபா குறித்த அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே விடுத்தது. ஆனால், அது இன்னும் சாத்தியப்படவில்லை. தற்போது 2020 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்தும் ஆயிரம் ரூபா பற்றியே பேசப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என பிரச்சாரம் செய்கின்றனர். என்று ஆயிரம் ரூபா கிடைக்கின்றதோ அன்று சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றோம்.
தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குமாறு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் இதற்கு முன்னர் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, 22 கம்பனிகளும் முன்வந்து, வழங்கினால்தான் சாத்தியமாகும்.
தேர்தல்மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கே எமது கூட்டணி முயற்சிக்கின்றது. எனவே, ஆளுங்கட்சிக்கு தாவவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாம் தாவுவோம் என கூறுபவர்களையும் எமது ஆட்சியின்கீழ் இணைத்துக்கொள்வோம்.
ஆயிரத்துடன் நின்றுவிடக்கூடாது. அதற்குமேல் வருமானம் உழைக்கும் வழிமுறைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதே சஜித் பிரேமதாசவின் எண்ணமாக இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை வருமானம் உழைக்கும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
கருணா அம்மான் வாய்ப்பேச்சு வீரராக கருத்தை கொட்டிவிட்டார். தற்போது தடுமாறுகிறார். " - என்றார்.