ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு

ஆசிரியர் - Admin
ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

கொத்மலை பகுதியில் இன்று (20.06.2020) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி நிச்சயம் வெற்றிபெறும். கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது மாற்றுக்கட்சிகளின் ஆதரவாளர்கள் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர். இம்முறையும் அதேநிலைமை தொடரும். புதிதாக மேலும் பலர் இணைந்துள்ளனர்.  ஐக்கிய தேசியக்கட்சியும் இரண்டாக பிளவடைந்துள்ளது. எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்.

ரணிலுக்கு அரசியல் தெரியும் என்றே நான் குறிப்பிட்டிருந்தேன். அவரை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை. அவர்தான் மத்திய வங்கி கொள்ளையின் முக்கிய புள்ளி என்பதை நாம் மறக்கமாட்டோம். சஜித்தை விடவும் ரணிலுக்கு அரசியல் தெரியும் என்பதே எனது தர்க்கமாக இருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்தை நாம் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டுபட்டுள்ளதால் சிலவேளை 6ஆவது உறுப்பினரையும் எம்மால் பெறக்கூடியதாக இருக்கும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் குருணாகலை மாவட்டத்தில் மொட்டு அணியில் போட்டியிடுகின்றனர். தயாசிறி ஜயசேகரவும் அந்த பட்டியலில் இருக்கின்றார். அங்கு மொட்டு சின்னத்தை ஆதரிக்கும் அவர், நுவரெலியாவுக்கு வந்து, சுதந்திரக்கட்சியின் 'கை'சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றார். அவர் ஆடை அணிந்துகொண்டா இவ்வாறு உரையாற்றுகிறார் என கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." - என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.

Radio