வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார்
வடக்கு மத்திய அதிவேகப் பாதையினைப் பார்வையிடும் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மீரிகமை – ரிலவுலுவ பகுதியின் நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் ICC பிரதான வழி நடாத்தல் மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார்.
இதன்போது, மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பணிப்பாளர் கே.எச்.எம்.ஏ.கே.கொஹெல்எல்ல அவர்கள் மத்திய அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதம அமைச்சருக்கு நீண்ட விளக்கமொன்றை வழங்கினார்.
ஐந்து ஒழுங்கைகள் மற்றும் ஆறு இடைப் பரிமாற்ற மத்திய நிலையங்களைக் கொண்டதாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தக் காலம் 30 மாதங்களாகும்.
உரிய முறையில் காணிகளைக் கையகப்படுத்தாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டமை இந்தக் கருத்திட்டம் தாமதமடைவதற்குப் பிரதான காரணமாகும் என இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நான்கு பொதிகளின் கீழ் உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் சில கட்டுமான நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாக திருப்தியடைய முடியாது எனவும் இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.
2017 ஜனவரி மாதம் இந்த அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், உடன்படிக்கையின் பிரகாரம் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருப்பின், 2019 ஜூலை மாதமளவில் மத்திய அதிவேகப் பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்க முடிந்திருக்கும் எனவும் இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் பிரதம அமைச்சருக்கு மேலும் தெளிவுப்படுத்தினார்.
இதன்போது, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்து அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அவர்கள், வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.