பொது இடத்தில் உணவு கழிவுகளை வீசியதுடன், பொய்யான தகவல்களை வழங்கிய ஆசிரியர் கைது..!

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் உணவு கழிவுகளை வீசியதுடன், பொய்யான தகவல்களை வழங்கிய ஆசிரியர் கைது..!

யாழ்.ஸ்ரான்லி வீதி அத்தியடி பகுதியில் பொது இடத்தில் பொறுப்பற்ற விதத்தில் கழிவுகளை வீசியபோது சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்ட ஆசிரியர் தனது மாமனாரின் பெயரை கூறி தப்பித்த நிலையில், 

நீதிமன்றில் குற்றப்பணம் செலுத்தும்போது உண்மை கண்டறியப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பகுதியில் உள்ள வீதியில் தனது வீட்டுக் குப்பைகளைக் கொட்டியுள்ளார்.

இதனை அறிந்த பொதுச் சுகாதார பரிசோதகர், ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு அவரின் தகவல்களைக் கேட்டுள்ளார். இதனால் தனது பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தனது மாமனாரின் பெயரை தனது பெயரர் என வழங்கியுள்ளார். 

இவ் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், நீதிமன்றினால் அவருக்குக் குற்றப் பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவரின் தேசிய அடையாள அட்டையினை குற்றப் பணம் கட்டுவதற்காகப் பரிசோதித்தபோது, அவரின் உண்மையான பெயர் கண்டறியப்பட்டது. 

இதனால் அவருக்கு எதிராக பெயர் மாற்றம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இது இவ்வாறிருக்க, நீண்ட காலமாக அங்கு வசிப்போரினால் அப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வீட்டுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு