தினமும் 24 கி.மீ நடந்தே சென்று கல்வி கற்கும் அம்பாள்புரம் மாணவர்கள்!

ஆசிரியர் - Admin
தினமும் 24 கி.மீ நடந்தே சென்று கல்வி கற்கும் அம்பாள்புரம் மாணவர்கள்!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 24 கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்குச் சென்று வரும் தமக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எவரும் முன்வருவதாக இல்லையென மாணவர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு, வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம் வீதியிலமைந்துள்ள அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் 12 கிலோமீற்றர் தூரம் வன்னிவிளாங்குளம் பாடசாலைக்கும் பாடசாலைமுடிந்து பிற்பகல் 12 கிலோ மீற்றர் நடந்தும் திரும்பிச்செல்லும் பரிதாபகரமான நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் மேற்படி கிராமத்தில் வாழும் தாங்கள் அன்றாடம் கூலிவேலை செய்யும் குடும்பங்களாகவே உள்ளனர் என்றும் இதில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்த வரட்சியால் தங்களுக்கும் எதுவித தொழில்களும் இல்லை.

மீனவர்களுக்கும் தொழில்களும் இல்லை என்றும் இந்த கிராமத்தில் இருந்து தினமும் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் 12 கிலோமீற்றர் கால்நடையாக வன்னிவிளாங்குளம் பாடசாலைக்கும் பாடசாலை முடித்து வீட்டிற்கும் திரும்பி வருகின்றனர்.

இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றோம் இது தொடர்பில் பல கடிதங்களை கொடுத்திருக்கின்றோம்.

இன்று வரை அதற்கு எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சித்தேர்தல் பிரசாரத்தில் எங்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பஸ்சை இரண்டு நாட்கள் இதனூடாக விட்டிருந்தனர்.

இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்ட இப்பகுதி மக்கள் தாங்கள் தமது பிள்ளைகளை தனியாகக் கூட அனுப்ப முடியாத அளவிற்கு ஒரு காட்டு வழியாகவே தினமும் பாடசாலைக்கு சென்று வருகின்றனர் இது பாதுகாப்பானது இல்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் இந்த மாணவர்கள் தினமும் நீண்ட தூரம் காட்டுவழியில் நடந்து பயணம் செய்து தமது கல்வியை தொடரும் அவலநிலை காணப்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு