SuperTopAds

தமிழர்களிடமிருந்து பறித்து சிங்கள மக்களுக்கு கொடுத்த குளங்களையும், விவசாய நிலங்களையும் திருப்பி கொடுத்துவிட்டு பேசுங்கள்..!

ஆசிரியர் - Editor I
தமிழர்களிடமிருந்து பறித்து சிங்கள மக்களுக்கு கொடுத்த குளங்களையும், விவசாய நிலங்களையும் திருப்பி கொடுத்துவிட்டு பேசுங்கள்..!

இலங்கையில் பொருளாதாரம் மேம்படவேண்டும் என கூறும் ஜனாதிபதி தமிழர்களின் விவசாய பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் பறித்து சிங்கள மக்களிடம் கொடுக்கப்பட்ட குளங்களையும், விவசாய நிலங்களையும் தமிழ் மக்களிடமே மீள வழங்குவாரா? 

என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் கொரோனா இடர் நிலையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பது குறித்து ஜனாதிபதி அதிகம் பேசிவருகின்றார். 

தமிழ் மக்களுடைய பொருளாதாரம் கடற்றொழில், விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகும். அதனை அழிக்கும் வகையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்தவர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அதில் முக்கியமானது காலம் காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த குளங்கள், விவசாய நிலங்ளை பறித்து 

சிங்கள மக்களுக்கு தாரைவார்த்ததாகும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் “ஆமையன்குளம்” என்ற குளத்தின் நீர்பாசனம் மூலம் சுமார் 360 ஏக்கர் விவசாய நிலத்தில் 100 தமிழ் குடும்பங்கள் விவசாயம் செய்துவந்தனர். 1984ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் குளமும் விவசாய நிலங்களும் 

பாவனையற்று இருந்த நிலையில் 2011ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் குளத்தின் புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 103 மில்லியன் ரூபாய் செலவில் குளம் புனரமைப்பு செய்யப்பட்டதுடன், குளத்தின் கீழான விவசாய நிலத்தின் பரப்பளவு 360 ஏக்கரில் இருந்து 900 ஏக்கராக அதிகரிக்கப்பட்டது. 

அதில் ஒரு துண்டு நிலம் கூட தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. நிலத்திற்கு சொந்தமான மக்கள் தமது சொந்த இடங்களில் வாழ முடியாமல் இருக்கையில், 2019ம் ஆண்டு 06ம் மாதம் 08ம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து குளத்தையும் 

குளத்தின் கீழுள்ள விவசாய நிலங்களையும் சிங்கள மக்களுக்கு வழங்கி குடியேற்றம் செய்தார். இவ்வாறு பல குளங்களும், பல விவசாய நிலங்களும் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு கெடுக்கப்பட்டது. நிலை இவ்வாறிருக்க தமிழ் மக்கள் பொருளாதார மேம்பாடு காண்பது எவ்வாறு? 

பொருளாதார மேம்பாடு குறித்து ஜனாதிபதி உண்மையாக சிந்தித்தால் பறித்தெடுத்த குளங்களையும், விவசாய நிலங்களையும் மிள வழங்குவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.