சுமந்திரனால் வெட்கப்படுகிறார் விக்கி!

ஆசிரியர் - Admin
சுமந்திரனால் வெட்கப்படுகிறார் விக்கி!

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலினால், சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சுமந்திரனின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. என் பழைய மாணவரான சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது?

இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது.

தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம்.

யாழ்ப்பாண தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேடம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும்.

ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது.

ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற அபிலாசையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது.

இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.

சிங்களவர்கள் மத்தியில் சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான்.

அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு.

சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன்.

சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது.

தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காது தான் அவர் அங்கு பேசியுள்ளார்.

மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை திரு.சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது.

இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும்.

சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை.

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. ” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு