யாழ். மருத்துவபீட சோதனைகள் குறித்து வதந்தி பரப்பியோரை கண்டுபிடிக்குமாறு முறைப்பாடு

ஆசிரியர் - Admin
யாழ். மருத்துவபீட சோதனைகள் குறித்து வதந்தி பரப்பியோரை கண்டுபிடிக்குமாறு முறைப்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெறும், கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் மீது விசாரணை நடத்தக் கோரி, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணைப் பிரிவுடன் இணைந்த, இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் நேற்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளோர் மற்றும் சுய, நிறுவன தனிமைப்படுத்தப்பட்டோருக்கான பிசிஆர் பரிசோதனைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து பல்வேறு அநாமதேய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமையால், தொற்று அபாயம் உள்ளது என்று உண்மைக்கு மாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

அத்தகைய வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியே, பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு