ஹட்டனில் பற்றியெரிந்த தொடர் வீடுகள்! - 50 பேர் நிர்க்கதி

ஆசிரியர் - Admin
ஹட்டனில் பற்றியெரிந்த தொடர் வீடுகள்! - 50 பேர் நிர்க்கதி

ஹட்டன் - எபோட்ஸிலி தோட்டத்தில், 14 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 9 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை உரிய இடமொன்றில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில், கோவிலுக்கு அருகிலுள்ள தொடர் குடியிருப்பிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீ பரவல் மக்கள் பதறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஹட்டன், டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Ads
Radio
×