தமிழ் மக்கள் அச்சமான நிலையிலேயே வாழ்கிறார்கள்! - ஐ.நா பிரதிநிதிகளிடம் மாவை
இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச்சந்திப்பு குறித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.
இதற்கமைய சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைப் பேரவையில் இலங்கையுடன் இணைந்து பிரேரணைகளை கொண்டு வருவதற்காகச் செயற்பட்ட நாடுகளே இதனை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட்ட அமைப்புக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக நேரடியாகக் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த முன்னாள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை உட்பட பல விசாரணை அறிக்கைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை ஆவணமாகக் கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆதாரங்கள் ஆவணங்கள் பல நேரடியாகவே பெறப்பட்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினரிடம் உள்ளன.
ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டபோது அந்தப் பிரேரணைகளை முன்மொழிந்த நாடுகளும் ஆதரவளித்த நாடுகளுமே தொடர்ந்தும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அச்சமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவை குறித்தும் ஐ.நா.மனித உரிமைப் பேரவை கவனம் செலுத்தவேண்டும்” என வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.