அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை!
அமெரிக்காவின் மிலேனியம் சலன்ச் கோர்பரேசன் நிறுவனத்துடனான (எம்.சி. சி) ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணைச்செயலர் அலைஸ் வெல்ஸ் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
' இரு நாட்டு மக்களின் அபிப்பிராயங்களுக்கு முரணாக எவ்வித ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள முடியாது என துணைச்செயலர் குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க துணைச்செயலர் அலைஸ் வெலஸ் எ. ம். சி. ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாகவும், அரசாங்கம் அதற்கு எவ்வித பதிலும் குறிப்பிடவில்லை என்றும் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டால் அதனை மாறுப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் தவறானதாகும்.
தற்போது விஜயம் மேற்கொண்ட அமெரிக்க துணைச்செயலர் எம். சி. சி ஒப்பந்தம் குறித்து எவ்விதமான அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கவில்லை. இவ்வொப்பந்தம் குறித்து முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை அவர் நன்கு அறிந்துள்ளார்” என்றார்.