மீண்டும் இனக்கலவர ஆபத்து!

ஆசிரியர் - Admin
மீண்டும் இனக்கலவர ஆபத்து!

1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரம் போன்று மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் இலங்கை தமிழர்கள் மத்தியில் வியாபித்துள்ளளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஆரம்பமான ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு நாளையும் சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்பதில் எந்தவித மயக்கமும், சந்தேகமும் ஏற்பட கூடாது என கூறினார்.

அத்துடன் தமிழ் மக்கள் தமக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு நீதியையும் அவை மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டையும் வேண்டி சர்வதேசத்தின் முன்னிலையில் தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பன்னாட்டு விசாரணையை கோருவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை எனவும், இதனை வலியுறுத்தி உலகளாவிய தமிழ் உறவுகள் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளவரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது எனவும் அந்த சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு அரசாங்கம் தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அச்சுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 1000 நாட்களைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர்களுக்கு எந்தவித நியாயமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழத்; தேசத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தீர்வு திட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை அமைப்பது போன்ற விதத்திலேயே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்திற்கும் வெளிநாட்டு உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்வதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறும் நிகழ்வுகளைப் பாரத்தால் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடங்களை தேடவேண்டிய நிலையே ஏற்படும் எனவும் இதனை தடுக்க வேண்டுமாயின் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய பாணியில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த இந்திய அரசின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு