தேசியப் பட்டியலுக்காக காத்திருக்கும் சம்பந்தன்,மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இருவரும் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவமூடாக பாராளுமன்ற உறுப்பினராக வரஇருப்பது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் ஒரு அறை கூவலை விடுத்திருந்தார் அந்த அறைகூவலில் இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். சம்பந்தன் அவர்கள் கடந்த 43 வருடங்களாக பாராளுமன்ற அரசியலில் இருந்து 87வயதைக் கடந்துள்ள நிலையில் இதுவரைகாலமும் சம்பந்தனினதும் அவரது கட்சியினரதும் அரசியல் இராஜதந்திரம் படு தோல்வி அடைந்துள்ளது.
தேர்தல் காலத்தில் மட்டும் இளைஞர்களும்,படித்தவர்களும் அரசியலிற்கு வரவேண்டும் என்று போலித்தனமான அறைகூவலை விடுத்துவருகின்றார்.சம்பந்தன் அவர்கள் கடந்த நான்கு பாராளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் புத்திஜீவிகள்,துறைசார்ந்த நிபுனர்களில் ஒருவரைக் கூட நியமிக்கவில்லை அதுமட்டுமல்லாமல்; தாம் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பொய்யான செய்திகளை கசியவிட்டுக்கொண்டு மறுபக்கத்தில் தேசியப் பட்டியல் மூலம் தள்ளாத வயதிலும் பாராளுமன்றம் செல்ல ஆசைப்படுகின்றார்.
கொழும்பில் இதுவரை காலமும் தமிழ் மக்களினுடைய பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட மனோகணேசன் அவர்களை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்குவதென தமிழரசுக்கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சுமந்திரன் அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார். அதற்கான முக்கிய காரணம் கூட்டமைப்பிற்கு இவ் முறை பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கபோவதில்லை சம்பந்தனைத் தவிர மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் வரமுடியாது அதற்காகவே கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.
இரண்டாவது காரணம் புதிய அரசியல் யாப்பு சீர் திருத்தத்தில் சுமந்திரன்,சம்பந்தனுடைய இரட்டை வேடங்களை(பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தல்,ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளல்)போன்ற விடயங்களில் மனோகணேசன் அவர்கள் ஆளுங்கட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதை ஊடகங்களுக்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தமையே சுமந்திரன்,மனோகணேசன் ஆகிய இருவருக்கும் இடையிலான விரிசலுக்கு காரணம்.
இந்நிலையில் படித்தவர்கள்,கொள்கைப் பற்றுடையவர்கள்,ஜனநாயகப் போராட்டதில் துணிச்சலுடன் ஈடுபடக்கூடியவர்கள்,இளைஞர்கள்,துறைசார்ந்த நிபுனர்களுக்கும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க சம்பந்தன்,மாவை,சுமந்திரன் தயாரா?