SuperTopAds

வெள்ளை வான் தகவல்களை வெளியிட்டவர்களுக்கு பிணை!

ஆசிரியர் - Admin
வெள்ளை வான் தகவல்களை வெளியிட்டவர்களுக்கு பிணை!

வெள்ளை வான் சாரதிகள் என கூறப்படும் இருவருக்கும், வெள்ளை வான் தொடர்பான ஊடக சந்திப்பை முன்னெடுக்க நிதி உதவி வழங்கியவர் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டுக்கும், பிணை வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முதலிரண்டு சந்தேக நபர்களுக்கும், அச் சந்திப்பில் கலந்துகொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபாவை ரூமி மொஹம்மட் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரை இன்று 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வெள்ளை வேன் விவகாரத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வெள்ளை வேன் சாரதிகள் என கூறப்படும் இரு நபர்களும் இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.